இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

சனி, 2 செப்டம்பர், 2017

வழிகாட்டலும் அறிவுரை பகர்தலும் நிகழ்ச்சி


வழிகாட்டலும் அறிவுரை பகர்தலும் நிகழ்ச்சி 

                 இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் 30/08/2017  புதன்கிழமை அன்று பிற்பகல் மூன்று மணியளவில் மாணவர்களுக்கு வழிகாட்டலும் அறிவுரை பகர்தலும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி. அ.பீட்டர் அவர்கள் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சிக்கு வந்தோரைப் பட்டதாரி ஆசிரியர் திருமதி.மு. தமிழ்ச்செல்வி அவர்கள் வரவேற்றார்.

                 சவால்களும் போட்டிகளும் நிரம்பிய இன்றைய சூழலில் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பள்ளியிலும் பள்ளிக்கு வெளியிலும் மாணவர்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ள  உறுதுணையாக இருக்கும் எனப் பள்ளிக்கல்வித் துறை இந்த நிகழ்ச்சியை நடத்தப் பணித்துள்ளதைத் தலைமையாசிரியர் எடுத்துக்கூறினார்.  மேலும், பள்ளிக் கல்விக்கு அடுத்து மேற்கொண்டு என்ன படிக்கலாம், படிப்பைத் தொடர்ந்து எத்தகைய பணிவாய்ப்புகள் நம் முன்னே உள்ளன என்பதை மாணவர்கள் அறியும் பொருட்டு பள்ளியின் சார்பில் தொடர்ந்து இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்களுக்கு வழிகாட்டப்படும் என்றார்.

               பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) திரு. மா. முருகன் அவர்கள் படிக்கும் போதே புரிந்து படிக்க வேண்டும் , முழுமையாகப் படிக்க வேண்டும் , பள்ளி மற்றும் ஊரக நூலகங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், குறிப்பெடுத்துப் படிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். மேலும், நூலகத்தில் வேலைவாய்ப்புப் பற்றிய இதழ் வருவதையும் மாணவர்கள் அதைப் பார்த்து கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்புகள், அதற்கான தகுதிகள் முதலானவற்றைப் பற்றிக் குறிப்பெடுத்துக் கொண்டு, நம் திறன் நம் இலக்கு, நம் முயற்சி ஆகிய ஒரு திட்டமிடலை வகுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

              முதுகலைத் தமிழாசிரியர் திருமதி.ப.கோ. பாரதமணி அவர்கள் வேலைவாய்ப்பு பற்றியும், வேலைவாய்ப்புப் பதிவு பராமரிப்புப் பற்றியும் கூறியதுடன், மேனிலைக் கல்விக்குப் பின்பு தொடர்ந்து கல்லூரிக்குச் செல்ல இயலாதவர்களுக்குப் பல்கலைக்கழகங்கள் தொலைதூரக்கல்வி மூலம் பட்டப்படிப்பு வழங்கி வருவதைப் பற்றிக்கூறினார்.

            முதுகலை ஆங்கில ஆசிரியர் திரு. ப. வீரமணி அவர்கள், தற்போதைய போட்டித் தேர்வை நல்ல முறையில் வெற்றி கொள்ள  ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடநூல்களை இப்போதிருந்தே பாதுகாத்துப் படித்து வரவேண்டும்,  நடப்பு நிகழ்வுகளைச் செய்திதாள்கள் மூலமாகத் தெரிந்து கொண்டு குறிப்பெடுத்து வரவேண்டும் என்றார்.
           
               தற்போது உலகில் உள்ள இளைய சமுதாயத்தைப் பயமுறுத்திவருகின்ற நீலத் திமிங்கலம் ( BLUE WHALE) எனும் விளையாட்டு ஏற்படுத்தும் விபரீதம் பற்றிய விழிப்புணர்வு செய்திகளை முன்வைத்தார்.

            இந்த நிகழ்ச்சிக்கு முதுகலை கணித ஆசிரியர் திருமதி. ந.ஜெயா அவர்கள் ஒருங்கிணைத்தார்.





         

            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக